யாழ்.பல்கலைக்கழக
மாணவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைகளில் அடைத்து
வைத்துள்ள சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது ஐக்கிய நாடுகள் சமை
உட்பட சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. என்று மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.போராடிய வீரர்களை மட்டுமல்லாமல், ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொதுமக்களையும் இலட்சக்கணக்கில் இலங்கை இராணுவம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவிகளோடு கொன்று குவித்த கொடுமையின் உண்மையும், ஐ.நா.மன்றம் கடமை தவறி வேடிக்கை பார்த்த அநீதியும், சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
ஆனால், தமிழ் மாணவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தும் கொடுமைபடுத்துவது உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் மனசாட்சி மறத்துப்போய் மௌனம் கடைபிடிப்பது கண்டனத்திற்கு உரியதாகும்.
மாணவர்கள் தற்போது தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் சென்று மிரட்டி வருகின்றனர்.
போரினால் தனிமைப்படுத்தப்பட்டு உறவுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த தமிழ் இளம்பெண்களை, இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று கட்டாயப்படுத்தி, பலவந்தமாக இராணுவத்தில் கொண்டுபோய் சேர்க்கின்ற அக்கிரமம் நடக்கின்றது.
அப்படி சேர்க்கப்பட்ட தமிழ்பெண்களை எவரும் சென்று பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை. இப்படி இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்பெண்கள் 21 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் மனநோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஆனால், அவர்களை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் பெண்களின் நிலைமை மிகவும் கவலை தருகிறது.
தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை திட்டமிட்டு செய்கின்ற இலங்கை அரசை தண்டிக்க வேண்டிய இந்திய அரசு, அதற்கு மாறாக அந்த அரசோடு தொடர்ந்து பொருளாதார ஒப்பந்தங்களை செய்தும், கடல் வழியாக மின்சாரத்தை இலங்கைக்கு கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்தும் துரோகம் இழைத்து வருகிறது.
இவ்வாறான நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமையில் அக்கரை உள்ள நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்பதுடன் சர்வதேச குற்றக்கூண்டில் இவ்வாறானவர்கள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment