Saturday, January 1, 2011

புலம்பெயர் சமூகத்திற்கு ஆப்பு வைக்கும் இலங்கையின் புதிய விசா நடைமுறை!

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்தபிறகு அவர்களுக்கு விசா வழங்கும் முறையை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டு வருகின்றது.

மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பிரஜைகளைத் தவிர ஏனைய நாட்டவர்களுக்கு வருகைக்குப் பின் விசா வழங்கும் முறை நிறுத்தப்பட்டவுள்ளதோடு, இணையத் தளம் வாயிலாக விசா வழங்கும் முறையும் அமுலுக்கு வரவுள்ளது.

அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் வருகையின்போது விசா வழங்கும் முறையைக் கைவிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலாத்துறையினரின் ஆட்சேபம் காரணமாக இது பின்போடப்பட்டது.

எவ்வாறாயினும் விரைவில் அதை அமுல் செய்ய இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்பாகவே அநதந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று விசா பெற வேண்டிய நிலை ஏற்பட்டால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இணையத்தளங்கள் வாயிலாக விண்ணப்பித்து உல்லாசப் பயணிகள் விசா பெற்றுக் கொள்ளக் கூடிய முறை விரைவில் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான ஒரு முறையை விரைவில் அமுலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குடிவரவுத் திணைக்களம் இது சம்பந்தமான துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஒரு அதிகாரி கூறினார். சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வருகை அனுமதி விசா வழங்கப்படுகின்றது.

அதேபோல் இலங்கை வரும் இவ்விரு நாடுகளிகளின் பிரஜைகளுக்கும் இலங்கை வந்ததும் வருகை அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 1970 கள் தொடக்கம் இலங்கை வெளிநாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வருகை தந்ததும் விசா வழங்கும் முறையை அமுல் செய்து வருகின்றது.

உள்நாட்டு மோதல்கள் காரணமாக கடந்த மூன்று தசாப்தத்துக்கு மேல் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இலங்கையில் சுற்றுலாத் துறை துரித வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

புத்தாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 700, 000 மாக அதிகரிப்பதே இலங்கையின் இலக்காகும் 01 Jan 2011

No comments:

Post a Comment