courtஇத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் “நிரந்தர மக்கள் சபை’ இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது.   உலகின் புகழ்வாய்ந்த யூரர் குழுவினரும், சர்வதேச மனித உரிமைகள் குழுவினரும் இன்னும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் இணைந்து இந்த விசாரணையை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்துள்ளன.   குறித்த சபையின் இலங்கை மீதான விசாரணைகளின் முதல் அமர்வு 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது. இதன் இரண்டாவது அமர்வே தற்போது நடைபெற்று வருகிறது.
  இந்த அமர்வின் போரின் போது பாதிக்கப்பட்டவர்களின் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அத்துடன் சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமைக் குழுக்களால் நிரந்தர மக்கள் சபைக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள், ஆதாரங்கள் என்பனவும் ஆராயப்படவுள்ளன.   இந்த அமர்வில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானச் செயற்பாடுகள், அதில் ஏற்பட்ட தோல்வி, இலங்கையில் மூண்ட இறுதிப்போர், போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் என்பன தொடர்பாக இந்தச் சபை விசேட கவனம் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.   இதுதவிர 1980 ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரை இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் இந்தச் சபை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.    குறிப்பாக 1987 ஆம் ஆண்டு இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றது தொடர்பாகவும், இறுதிப்போரின் போது அந்த நாடு கொண்டிருந்த வகிபாகம் தொடர்பாகவும் இந்தச் சபை கவனம் செலுத்த உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்தச் சபையின் அமர்வில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், சனல் – 4 தொலைக்காட்சியில் இறுதிப்போர் பற்றிய ஆவணப் படங்களைத் தயாரித்த ஊடகவியலாளர் கெலும் மெக்ரேயும் உரையாற்றவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.