Thursday, January 13, 2011

தடுப்பு முகாம்களில் சகிக்கமுடியாத நிலைமைகளை எதிர்கொண்டோம் - விடுவிக்கப்பட்ட போராளிகள் தெரிவிப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 03:48.42 AM GMT +05:30 ]
இலங்கை இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் சகிக்கமுடியாத நிலைமைகளையும் அடிப்படை சட்டம் மற்றும் ஜனநாயக மனித உரிமை மீறல்களையும் நாம் எதிர்கொண்டோம் என படைத்தரப்பின் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிப்போராளிகள் உலக சோசலிஸ இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டோரிடமும் இராணுவத் தடுப்பு முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டோர்களின் உறவினர்களிடமும் உலக சோசலிஸ இணையத்தளம் தகவல் திரட்டும் பணியின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 மே மாதம் தோல்வியடைந்ததைத் தொடர்நது ஆண்கள், பெண்கள் சிறுவர் உட்பட சுமார் 80 ஆயிரம் பேரை நலன்புரிக் கிராமங்கள் என்னும் முட்கம்பி தடுப்பு முகாம்களில் இராணுவம் தடுத்துவைத்து தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது.
இந்தத் தடுப்பு முகாம்கள் திறந்த சிறைக்கூடங்களாகவே நடத்தப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பு சந்தேக நபர் எனக் கருதப்பட்டவர்கள் வேறுபடுத்தப்பட்டு கண்காணாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு வேறுபிரித்து கைதாகி கொண்டுசெல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் வரை உயர்ந்தது. இவர்களில் ஆபத்தானவர்கள் எனப் பட்டியலிடப்பட்டவர்கள் இரகசியத் தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டார்கள்.
இத்தடுத்து வைத்தலுக்கு எதிராக குரல்கொடுக்கவோ மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கவோ இடம்கொடுக்காத வகையில் படைத்தரப்பால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் சுமார் 11 ஆயிரத்து 696 பேரை தாம் தடுத்து வைத்திருந்ததாகவும், அவர்களில் 5 ஆயிரத்து 586 போ் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வௌயிட்டுள்ளது.
உலகிலேயே பெருமளவு மக்களைக்கொண்ட தடுப்பு முகாம்களை வைத்திருந்த நாடாக இலங்கையை சர்வதேச நீதிபதிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களைப் பார்வையிடவோ அல்லது அவர்கள் குறித்த விபரங்களை வெளியிடவோ அரசாங்கம் மறுத்து வந்துள்ளது. இத்தகைய முகாம்களுக்குச் செல்ல சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை.
இலங்கைப் பாதுகாப்பு படைகள் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், காணாமற்போதல் போன்ற செயல்களுக்கு கெட்டபெயர் எடுத்தவைகளாகும்.
பொலநறுவைக்கு அருகிலுள்ள வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின்' உறவினர் ஒருவரிடம் உலக சோசலிஸ இணையத்தள செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டபோது, அங்கு மூன்று தனித்தனி முகாம்கள் காட்டில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 1000 ற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாகவும் கூறிய அவர், கூடாரங்கள் ஆறு அறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் 5 போ் இருப்பதாக தெரிவித்தார். முகாம்கள் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டு இராணுவ வீரர்களால் காவல் புரியப்படுவதாகவும் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளில் சிலருக்கு மட்டுமே பாய்களும் தலையணைகளும் வழங்கப்பட்டுள்ளன. மாதமொரு தடவை ஒரு துண்டு சவர்க்காரம், சிறிய சாம்பு பக்கட், ஒரு பக்கட் பற்பசை வழங்கப்படுகிறது. மூன்றுவேளை சோறு வழங்கப்பட்டபோதிலும் போதியளவு இல்லை. தரமும் மோசமானது. உடுபுடவைகள் மற்றும் ஏனையவை குடும்பத்தவரால் வழங்கப்படவேண்டும். பெற்றோர்களும் மனைவிமார்களும் மாத்திரமே தடுப்புக் கைதிகளைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர் ஒருவர் கூறுகையில், தினமும் காலை தடுப்புக் கைதிகள் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும். தேசியக்கொடியை ஏற்றவேண்டும். நாட்டிற்கு எதிராக எந்தவேலையையும் மேற்கொள்ளமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும். அதன்பிறகு நாளாந்த வேலைகளான முகாமைச் சுத்தப்படுத்தல், கடும் பண்ணை வேலைகள் என்பவற்றைச் செய்யவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment