தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இராணுவத்தினர் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசர காலசட்ட நீடிப்புத் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தக் கொடூர சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றன என்றும், மரண பயம் காரணமாக இப்படியான சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.இதேவேளை, கிளிநொச்சி விசுவமடுப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பப் பெண்கள் சில இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரிந்ததே.

இதேபோன்று வவுனியா வடக்கு கனகராயன்குளம் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது